×

மாவட்டத்தில் கட்டுப்பாடு அமலுக்கு வந்தது; தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

* 281 பதற்றமானவை
* 6 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை

திருவள்ளூர், மார்ச் 17: மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதி மீறலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற பொதுத்தேர்தல் – 2024 தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் 19.04.2024 அன்று நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து மாவட்ட கலெக்டர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனுக்கள் வருகிற மார்ச் 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல் தளம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் அறையில், வேட்பு மனுக்கள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை அனைத்து நாட்களிலும் பொது விடுமுறை நீங்கலாக பெற்றுக்கொள்ளப்படும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 83 ஆயிரத்து 710 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 16 லட்சத்து 70 ஆயிரத்து 279, பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 17 லட்சத்து 12 ஆயிரத்து 702 மற்றும் மூன்றாம் பாலினம் வாக்காளர்கள் 729 ஆகும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட 42 ஆயிரத்து 423 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு 3,687 வாக்குச்சாவடிகளும், 1,301 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. இவற்றில் 281 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள், 6 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. மேற்கண்ட பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் நாளன்று நடக்கும் அனைத்து நடை முறைகளும் சிசிடிவி மூலம் நேரடியாக மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகளில் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள தேர்தலுக்காக மொத்தம் 9,119 வாக்குப்பதிவு கருவிகளும் 4,821 கட்டுப்பாட்டுக் கருவிகளும் மற்றும் 5,333 யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் கருவியும் பயன்படுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிகளை அமல்படுத்துவதற்காக 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்டம் முழுவதும் 90 பறக்கும் படை குழுக்கள் மற்றும் 90 நிலை கண்காணிப்பு குழுக்கள், 20 காணொளி கண்காணிப்பு குழுக்களும், 10 காணொளி பார்வையாளர் குழுக்களும், வேட்பாளர்களின் செலவினங்களை கண்காணிக்கும் பொருட்டு 10 உதவி செலவின குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. பறக்கும் படை குழுவினர், காணொளி கண்காணிப்பு குழு மற்றும் நிலைகண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கு தனித்தனியாக வாகன வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் பேரில், மேற்கண்ட வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்துப்பட்டு குழுவினரின் பணிகள் மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகள் மூலம் கண்காணிக்கப்படும்.

வேட்பாளர்களாக இருப்பவர்கள் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் தற்காலிக கட்சி அலுவலகம் அமைத்தல் போன்றவற்றிற்கு அனுமதி பெறுவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் சுவிதா ‘Suvidha’ என்ற இணையதளம் வழியிலான அனுமதி பெற்றுக்கொள்ளலாம். இந்த இணையதளத்தின் முகவரி ‘https://suvidha.eci.gov.in’ ஆகும். வேட்பாளர்கள் மேற்கண்ட இணையதளத்தின் மூலம் விண்ணப்பம் செய்து கொள்ள வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இந்த இணையத்தின் மூலம் அனுமதி பெற, 48 மணி நேரத்திற்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் நிர்வாகிகளும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர் இந்த சுவிதா இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது நேரடியாகவோ விண்ணபிக்கலாம்.

அதே போல் சி விஜில் (C-Vigil) என்னும் கைபேசி செயலி இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்களை புகார் அளிக்க வெளியிடப்பட்டுள்ளது. தங்கள் பகுதியில் தேர்தல் நடைபெறும் போது ஏற்படும் விதிமுறை மீறல்களை இந்த செயலி மூலம் புகார் அளிக்கலாம். புகாரின் விவரங்கள் புகைப்படம், காணொளி காட்சி மற்றும் விதிமீறல் நடைபெறும் இடம் உடனடியாக மாவட்ட தேர்தல் கட்டுப்பட்டு அறைக்கு தெரியவரும். சம்மந்தப்பட்ட தொகுதி பறக்கும் படை குழுவினருக்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும். இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க பொதுமக்களுக்காக பொதுமக்கள் 044-27660641, 044-27660642, 044-27660643, 044-27660644 மற்றும் இலவச தொலைபேசி எண் 1800 425 8515லும் தங்கள் புகார்களை அளிக்கலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆவணங்கள் வேண்டும்
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா குறித்த புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். எந்த ஒரு தேவைக்காக பணத்தை கொண்டு சென்றாலும் அதற்கான ஆவணங்கள் இல்லாவிட்டால் பணம் பறிமுதல் செய்யப்படும்.

அகற்றப்பட்ட தலைவர் படங்கள்
நாடாளுமன்றத் தேர்தல் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டதையடுத்து திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகர மன்ற தலைவர் அறை மற்றும் கூட்ட அரங்கம் ஆகியவற்றை பூட்டி சீல் வைத்தனர். அதேபோல் அரசின் சாதனைகள் குறித்த தகவல்களை பேப்பர் ஒட்டி மறைத்தனர். மேலும் நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் மாட்டப்பட்டிருந்த தலைவர்கள் படங்கள் அகற்றப்பட்டது. இதில் நகராட்சி ஆணையர் சுபாஷினி மற்றும் சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் உதவி பொறியாளர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post மாவட்டத்தில் கட்டுப்பாடு அமலுக்கு வந்தது; தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Parliamentary General Elections ,Tamil Nadu… ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2...